ஒரு ‘கிரிக்கெட்’ வீரர் இப்படி பண்ணுவார்ன்னு நெனைச்சு கூட பார்க்கல.. என்ன ஆனாலும் சரி நாங்க ‘குரல்’ கொடுத்துட்டேதான் இருப்போம்.. பொல்லார்டு அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கின் செயலுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் முட்டியால் அழுத்தி கொலை செய்தார். இது அப்போது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் கறுப்பின மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக ‘Black Lives Matter’ (BLM) என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கால்பந்து, கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது வீரர்கள் முட்டியிட்டு இனவெறிக்கு எதிரான தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) கிரிக்கெட் போட்டியிலும் அனைத்து நாட்டு அணி வீரர்கள் இதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர்களும் இதேபோல் முட்டியிட்டனர். அப்போது அந்த அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் (Quinton de Kock) மட்டும் முட்டியிட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இதனால் உலகளவில் பலரும் டி காக் மீது கண்டனம் தெரித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் தென் ஆப்பிரிக்காவின் ப்ளேயிங் லெவனில் இருந்து டி காக் நீக்கப்பட்டிருந்தார். BLM பிரச்சாரத்துக்கு எதிராக இருந்ததற்காகதான் அவர் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு (Pollard) இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த விஷயத்தில் எங்களது நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு அணியாக எங்களின் நிலைப்பாடு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். ஒவ்வொருவருக்கும் இந்த விவகாரத்தில் கருத்து உள்ளது. ஆனால் எப்போதும் கூறுவது ஒன்றுதான்.
இந்த பிரச்சனையை புரிந்துகொண்ட அனைவரும் இதற்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். இதைத்தான் நான் எப்போது கூறி வருகிறேன். இந்த பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதில் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்றே நான் நினைக்கிறேன். யாரும் எங்கள் மீது பரிதாபப்பட்டோ அல்லது வருத்தப்பட்டோ இதை செய்ய தேவையில்லை.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதனால் இப்போது இதுகுறித்து என்னால் எதுவும் கூற முடியாது. தெளிவான தகவல் கிடைத்ததும் டி காக் பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.
ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் Black Lives Matter பிரச்சாரத்தை எதிர்ப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதற்கு முன்பு இப்படியொரு விஷயத்தை கேள்விப்பட்டது கூட இல்லை. இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். ஆனால் என்ன ஆனாலும் சரி, இந்த பிரச்சாரத்துக்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். இது எங்களின் உரிமைக்கான குரல்’ என்று பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்