"'இத' தான் என்னால தாங்கிக்கவே முடியல.. நான் ஊருக்கே போயிடுறேன்.." 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'ஆடம் ஸம்பா'.. கடுப்பில் சொன்ன 'காரணம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் அதே வேளையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கமும் இங்கு அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு, இந்தியாவை கடுமையாக பாதித்து வருகிறது. பல பேர், இந்த வீரியமிக்க தொற்றின் காரணமாக, பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களில், ஆஸ்திரேலிய வீரர்களான ஆண்ட்ரு டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா (Adam Zampa) உள்ளிட்ட வீரர்கள், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். கொரோனா தொற்றின் காரணமாக, பயோ பபுள் முறையை அனைத்து வீரர்களும் கடைபிடிக்க வேண்டும். இந்த விதிமுறை படி, வெளியே எங்கும் சுற்றித் திரியாமல், போட்டி முடிந்தால் நேராக, ஓட்டல் அறைக்குத் தான் செல்ல வேண்டும்.
இது மாதிரியான காரணங்களாலும், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு செல்லத் தடை ஏற்பட்டு விடுமோ, என்ற பயத்தினாலும், சில வெளிநாட்டு வீரர்கள், சொந்த ஊருக்கு கிளம்பி வருகின்றனர். இந்நிலையில், தான் ஏன் ஆஸ்திரேலியா கிளம்ப முடிவு எடுத்தேன் என்பது பற்றி, ஆடம் ஸம்பா கருத்து தெரிவித்துள்ளார்.
'இந்தியாவில் இருப்பதால், நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சுகாதாரம் பேணுவது குறித்தும் அதிகம் அறிவுறுத்தப்பட்டோம். இது மிகவும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமாக நான் கருதினேன். ஆறு மாதத்திற்கு முன்பாக, துபாயில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது கூட, இந்த மாதிரி நான் உணரவில்லை. ஆனால், இங்குள்ள பயோ பபுள், கடுமையான ஒன்றாக நான் கருதுகிறேன்.
அது மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவே நான் உணர்ந்தேன். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரை விட, துபாயில் நடந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக இதற்குள் நிறைய அரசியல் விஷயங்கள் உள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் வைத்து தான் டி 20 உலக கோப்பை போட்டியும் நடைபெறவுள்ளது.
நிச்சயம் இந்த விஷயம் கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கும். இங்கு கொரோனா தொற்றின் தீவிரமும் மோசமாக உள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிகளை மேற்கொண்ட போதும், போட்டிகளை ஆடுவதற்கான ஒரு உந்துதல் என்னிடம் ஏற்படவில்லை' என ஆடம் ஸம்பா, தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்