‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விளையாட்டு மைதானத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் முடிந்த கையோடு, அங்கிருந்து ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க இந்திய அணி சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி அந்நாட்டில் 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
கொரோனா காலம் என்பதால், சிட்னிக்கு அருகில் உள்ள ஒலிம்பிக் பார்க் என்ற இடத்தில் உள்ள ஓட்டல் அறையில், இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நேற்று நடந்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய வீரர்கள் தங்கி உள்ள ஓட்டலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது க்ரோமர் பார்க் என்ற இடம். இங்கு உள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு அந்நாட்டு நேரப்படி அங்கு நேற்று மாலை 4.30 மணிக்கு உள்ளூர் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது வீடுகளுக்கு மேலே 50 மீட்டர் தொலைவில் பறந்து வந்த சிறியரக விமானம் ஒன்று திடீரென மைதானத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. விமானம் தாறுமாறாக வருவதைக் கண்ட அங்கு உள்ளூர் வீரர்கள் பதறி அடித்து ஓடினர். இதில் விமானத்தை ஓட்டிவந்த இளம் பயிற்சி விமானிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து, க்ரோமர் கிரிக்கெட் கிளப்பின் மூத்த துணைத் தலைவர் கிரேக் ரோலின்ஸ் கூறுகையில், ‘விமானம் கீழாக பறந்து வந்தபோது, நானும் வேகமாக ஓடிக்கொண்டே, பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர்களை பார்த்து வேகமாக ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினேன். அவர்களும் ஓட தொடங்கிவிட்டனர்’ என்று தெரிவித்தார்.
ஸ்காட் மானிங் என்பவர் அலறியடித்துக் கொண்டே பயந்து ஓடியதாகக் கூறியுள்ளார். இந்த விமான விபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே விமான விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மற்ற செய்திகள்