"ஒருநாள் சொர்க்கத்துல நம்ம ரெண்டு பேரும்".. மாரடோனா மறைவின் போது பீலே பகிர்ந்த ட்வீட்.. கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து விளையாட்டின் அரசர் என கருதப்படும் பீலே மரணமடைந்திருப்பது உலக கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த மாரடோனாவின் மரணத்தின்போது பீலே பகிர்ந்திருந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
Also Read | கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தன்னுடைய 22 வருட கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 1282 கோல்கள் அடித்து, பிரேசில் அணியின் எப்போதைக்குமான லெஜெண்ட் வீரராக கருதப்படுபவர் பீலே.
எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ (Edson Arantes do Nascimento) என்ற இயற்பெயர் கொண்ட பீலே, பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. செப்டம்பர் 2021 இல் கேன்சரால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரது பெருங்குடலில் இருந்து கட்டி ஒன்று அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் பீலே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மரணத்தின்போது பீலே எழுதிய ட்வீட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பதிவில்,"நான் எனது சிறந்த நண்பரை இழந்தேன். உலகம் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரனை இழந்தது. இன்னும் நிறைய சொல்ல வேண்டும். ஆனால் இப்போதைக்கு, கடவுள் அவருடைய குடும்பத்திற்கு வலிமையை கொடுக்கட்டும். ஒரு நாள், நாம் இருவரும் சொர்க்கத்தில் ஒன்றாக விளையாடுவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பீலே - மாரடோனா இடையேயான நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.
Que notícia triste. Eu perdi um grande amigo e o mundo perdeu uma lenda. Ainda há muito a ser dito, mas por agora, que Deus dê força para os familiares. Um dia, eu espero que possamos jogar bola juntos no céu. pic.twitter.com/6Li76HTikA
— Pelé (@Pele) November 25, 2020
மற்ற செய்திகள்