இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் பிரதமர் போட்ட பரபர ட்வீட்.. T20WC2022
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடிலெய்டில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது இங்கிலாந்து அணி. இந்நிலையில் இறுதிப்போட்டி குறித்து பாகிஸ்தான் பிரதமர் போட்ட ட்வீட் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.
அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் குவித்தனர்.
இதன்மூலம், 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்க இருக்கிறது இங்கிலாந்து. இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீஃப் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆக, இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 vs 170/0" போட்டி நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து விளையாடியது பாகிஸ்தான். அதில் இந்தியா 152 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. இதை சேசிங் செய்த பாகிஸ்தான் அணி 152/ 0 என்ற நிலையில் அப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் இலக்கை 170/0 என்ற நிலையில் எட்டியது. இறுதிப்போட்டியில், பாகிஸ்தானும் இங்கிலாந்தும் மோத இருப்பதை இப்படி குறிப்பிட்டு ஷெரீஃப் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்