‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் உமர் அக்மலை முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் சமீபத்தில் சூதாட்டப் புகார் தொடர்பான விசாரணை காரணமாக தடை செய்யப்பட்டார். முன்னதாக அவர் அணித் தேர்வின்போது கோச் முன்னிலையில் ஆடைகளைக் களைந்து எனக்கு எங்கே கொழுப்பு உள்ளது காட்டுங்கள் எனக் கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உமர் அக்மலை முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையாக எச்சரித்துள்ளார்.
உமர் அக்மல் குறித்துப் பேசியுள்ள ஜாவேத் மியாண்டட், “உமர் அக்மல் உங்களுடைய மாமனாரான அப்துல் காதிர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். அவர் சார்பாக உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் உங்களுடைய நடத்தையைச் சரி செய்யாவிட்டால், காதிருக்காக உங்களை பொறுப்பாக்க வேண்டி இருக்கும். உமர் அக்மலின் பெற்றோரும் அவர்களுடைய மகனை ஒழுங்குபடுத்த வேண்டும்.
கிரிக்கெட்டில் அதிக பணம் சம்பாதிக்கும் நீங்கள் அவ்வப்போது மலிவான சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். இதனால் பாகிஸ்தானுக்கும், கிரிக்கெட்டுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அவப்பெயரை தேடித்தருகிறீர்கள். அனைவரும் உங்களை திட்டுகின்றனர், உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் நீங்கள் தீங்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். கிரிக்கெட் உங்களுக்கு பணம் மட்டுமல்ல, மரியாதையையும் கொடுக்கிறது. நாங்கள் கிரிக்கெட்டை விட்டு வந்து விட்டபோதும் மக்கள் எங்களை மதிக்கிறார்கள். அதனால் உங்கள் நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள்” என எச்சரித்துள்ளார்.