டி20 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்ட 2 மணிநேரத்தில் வந்த ‘அதிர்ச்சி’ செய்தி.. என்ன நடக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனிடையே இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. இதில் பாபர் அசாம் கேப்டனாகவும், சதாப் கான் துணைக் கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். அதேவேளையில் சோயிப் மாலிக் மற்றும் சர்ஃப்ராஸ் அகமது ஆகிய அனுபவ வீரர்கள் அணியில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் டி20 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை அறிவித்த 2 மணிநேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் அக் (Misbah-ul-Haq) மற்றும் பவுலிங் பயிற்சியாள்ர் வகார் யூனிஸ் (Waqar Younis) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் கடந்த 2019-ம் ஆண்டுதான் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இன்னும் இவர்களது பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டு உள்ளது. இந்த சூழலில் இருவரும் பதவி விலகியுள்ளனர். இதுகுறித்து பேசிய மிஸ்பா உல் அக், ‘2 வருடம் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். இதில் நீண்ட நாள்கள் எனது குடும்பத்தை பிரிந்து பயோ பபுளில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவே நான் பதவி விலகுகிறேன்.
டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள இந்த நேரத்தில் பதவி விலகுவது சரியானது இல்லைதான். ஆனாலும் புதிதாக ஒருவர் அணியை வழி நடத்தினால் நன்றாக இருக்கும். இனி வரும் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.
அதேபோல் வகார் யூனிஸும் தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மிஸ்பா தனது ராஜினாமா முடிவு குறித்து என்னிடம் தெரிவித்தார். இருவரும் ஒன்றாகதான் பணிக்கு வந்தோம், 2 வருடம் இணைந்து பணியாற்றியுள்ளோம். அதனால் பதவி விலகும் போதும் ஒன்றாக விலக வேண்டும் என நினைத்தேன். 16 மாதங்கள் பயோ பபுளில் இருந்துள்ளோம். இது எங்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் சோர்ந்துவிடாமல் அடுத்து வரும் தொடர்களில் வெற்றி பெற வேண்டும்’ என வகார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்