'அசாத்திய பவுலிங் திறமை இருந்தும்... அடுத்த போட்டிக்கு வாய்ப்பு இல்லை'!?.. கெஞ்சும் இளம் வீரர்!.. கொந்தளிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது அறிமுக போட்டியிலேயே, முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஓலே ராபின்சன் கிரிக்கெட் கரியர் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (ஜூன் 2) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் கான்வே, 347 பந்துகளில் 200 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சன் முதல் இன்னிங்சிலேயே டாம் லாதம், ராஸ் டெய்லர், டி கிராண்ட் ஹோம், ஜேமிசன் ஆகிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆனால், முதல் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை சம்பாதித்த ஓலே ராபின்சனின் கிரிக்கெட் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அதாவது, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அவர் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்டுகள் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளன. குறிப்பாக, அவரது ட்வீட் ஒன்றில், வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் போன்றே இனவெறி குறித்தும் அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து அவர், "எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை. அந்தக் காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். இன்று களத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எனது அறிமுக டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் எனது பெருமை பற்றியதாக இருக்க வேண்டும்.
ஆனால், கடந்த காலத்தில் எனது சிந்தனையற்ற நடத்தை இதைக் கெடுத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான், Daily Telegraph தகவலின் படி, ஜூன் 10ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஓலே ராபின்சன் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் விசாரித்து வருகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், எதிர்காலத்தில் இனிமேல் ராபின்சன் சம்பவம் போல் நிகழாமல் இருக்க, புதிதாக அணியில் இணையும் வீரர்களின் கடந்த கால சமூக தள டிவீட்ஸ், மெசேஜஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். ராபின்சன் தனது செயல் குறித்து இங்கிலாந்து அணிக்கும், இந்த உலகிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டிய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்