இரண்டே 'மேட்ச்' மூலம்.. ஒட்டு மொத்தமா திரும்பி பார்க்க வைத்த வீரர்.. "ஐபிஎல் ஏலம் களை கட்டப் போகுது"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
மூன்றாவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 265 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வழக்கம் போல வேகமாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களில் ஆல் அவுட்டானது.
கேப்டன் ரோஹித் ஷர்மா
இதனால், இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மா கேப்டனான முதல் ஒரு நாள் தொடரிலேயே அணியைச் சிறப்பாக வழி நடத்தி, அசத்திக் காட்டியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஓடேன் ஸ்மித்
வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் தொடரை இழந்த போதிலும், அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஒருவரைப் பற்றித் தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர். இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டியில், ஓடேன் ஸ்மித் களமிறங்கியிருந்தார். இரண்டாவது போட்டியில், 2 விக்கெட்டுகளை சாய்த்த இவர், 20 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்திருந்தார்.
ரவுண்டு வருவார்
அதே போல, இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில், ஒரு விக்கெட் எடுத்த ஸ்மித், 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்தார். இந்திய மைதானத்தில், இவர் மிகச் சிறப்பாக ஆடி வருவதால், நாளை நடைபெறும் ஐபிஎல் ஏலத்திலும் ஓடேன் ஸ்மித் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் அணிகள் போடும் திட்டம்?
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில், கெயில், பொல்லார்ட், நரைன், பிராவோ, ரசல் உள்ளிட்ட பல வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில், இந்திய மைதானத்தில், இந்திய அணிக்கு எதிரான அதிரடி ஆட்டம் மற்றும் பவுலிங் என ஒரு ரவுண்டு வந்துள்ள ஓடேன் ஸ்மித்தின் ஆட்டமும், நிச்சயம் அனைத்து ஐபிஎல் அணிகளும் கவனித்திருக்கக் கூடும்.
எதிர்பார்ப்பு
ஐபிஎல் நெருங்கும் நேரத்தில், அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை அணியில் சேர்க்க குறி வைக்கலாம் என திட்டம் போட்டிருக்கும். அப்படி பார்த்தால், ஏலத்திற்கு ஒரு நாள் இருக்க, பல அணிகளையும் தன் பக்கம் திருப்ப வைத்துள்ளார் ஓடேன் ஸ்மித். இதனால், ஒரு அதிரடி ஆல் ரவுண்டர் வீரரை அணியில் எடுக்க, போட்டி நிலவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்