தாலிபான்கள் கிரிக்கெட்டுக்கு எதிரியா..? நண்பனா..? ‘இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’.. தாலிபான் ஆட்சியின் கீழ் ‘முதல்’ அதிரடி.. ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தாலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சி எப்படி இருக்க போகிறது என உலக நாடுகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
முந்தைய தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள தாலிபான்கள், பெண்கள் கல்வி கற்க அனுமதிப்பதற்கு ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தாலிபான்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் என்றும், அவர்கள் அதற்கு எதிரி என்றும் கூறப்படுகிறது.
ஆனால் நேற்று அஜிஜுல்லா ஃபாசில் என்பவரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக தாலிபான்கள் நியமித்துள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே 2018 செப்டம்பர் முதல் 2019 ஜூலை வரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக செயல்பட்டுள்ளார். இனி நடைபெறும் கிரிக்கெட் தொடர்கள் குறித்து இவரே முடிவெடுப்பார் என்று தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் ஆட்சியின் முதல் நியமனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி, ‘தாலிபான்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கின்றனர். அதனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நடவடிக்கைகள் தொடர்ந்து புத்துயிர்ப்புடன் செயல்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. ஆனால் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சேர்மன் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. அந்நாட்டு நட்சத்திர ஆட்டக்காரர்களான ரஷீத் கான், முகமது நபி ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். தற்போது இருவரும் இங்கிலாந்தில் உள்ளனர். இதில் ரஷீத் கான் ‘The Hundred’ கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
இதனிடையே இந்தியாவில் நடைபெற்று கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியுடன், ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Former ACB Chairman @AzizullahFazli has been re-appointed as ACB's acting Chairman. He will oversee ACB's leadership and course of action for the upcoming competitions. pic.twitter.com/IRqekHq7Jt
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 22, 2021
மற்ற செய்திகள்