"என்னா அடி.. எங்ககிட்ட அவரு அப்படி அடிக்காம இருக்கணும்".. கோலி பற்றி பேசிய நெதர்லாந்து கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுT20 உலகக்கோப்பை தொடர் சூடுபிடித்துள்ள நிலையில், நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி குறித்து பேசியிருக்கிறார்.
இந்த வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், கோலி - பாண்டியா இணை பரபரப்பிற்கும், அழுத்தமான சூழ்நிலைக்கும் இடையே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், மொத்த உலகமும் விரல் நகங்களை கடித்தபடி அமர்ந்திருக்க, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் நொறுக்கி இந்தியாவை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் சென்றார் கோலி. கைமீறிவிட்ட சூழ்நிலையில் இருந்து, அணியை மீட்டெடுத்தார் அவர்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கோலியின் அதிரடி திகைக்க வைத்தது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கோலியின் இந்த ஆட்டத்தை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கோலி குறித்து பேசியிருக்கிறார். அப்போது,"பாகிஸ்தான் உடனான போட்டியில் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. சொல்லப்போனால் அது ஒரு மாயத்தன்மை வாய்ந்த இன்னிங்ஸ். அவர் எங்களுடனான போட்டியில் அப்படி விளையாட மாட்டார் என நம்புகிறேன்" என்றார்.
மேலும், உலகக்கோப்பையில் விளையாடுவது தங்களுடைய நீண்டநாள் கனவு என்றும், அப்படியான வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்,"உலகக்கோப்பையில் விளையாடுவது எந்த ஒரு அணிக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். அதுவும் உலகின் மிகவும் புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் உலகின் சிறந்த அணியான இந்தியாவுடன் விளையாடுவது நிச்சயம் மிகச் சிறந்த தருணமாக இருக்கும். இந்தியாவுடனான போட்டியில் எங்களால் முடிந்த அளவு போராடுவோம். நாங்கள் வெற்றிபெறுவோம் என பலர் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆகவே, எங்களுக்கு ப்ரெஷர் ஏதுமில்லை" என்றார். இந்தியா - நெதர்லாந்து அணி மோதும் போட்டி, நாளை சிட்னியில் நடைபெற இருக்கிறது.
மற்ற செய்திகள்