‘அப்போ தோனியை ரொம்ப கோவமா திட்டிட்டேன்’.. ‘ஆனா அத நெனைச்சு..!’.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. ரகசியம் உடைத்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா 2005ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனியை திட்டியது தொடர்பாக நினைவு கூர்ந்துள்ளார்.

‘அப்போ தோனியை ரொம்ப கோவமா திட்டிட்டேன்’.. ‘ஆனா அத நெனைச்சு..!’.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. ரகசியம் உடைத்த வீரர்..!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2005ம் ஆண்டு இந்திய அணியின் சார்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய தோனி சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டிக்கு முன்பாக தோனி இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடி இருந்தார். அந்த போட்டிக்கு முன்பு வரை தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 12 மட்டுமே.

அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் தோனி 148 ரன்கள் அடித்து பாகிஸ்தானை பந்தாடினார். இந்த சதம் இப்போதும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த தொடரில் கேட்சை தவறவிட்டதற்காக தோனியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கடுமையாக திட்டியிருப்பார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்தது என ரசிகர்கள் நினைத்துக்கொண்டு இருக்க அதற்கு நெஹ்ரா பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்த நெஹ்ரா, ‘இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எனக்கு நன்றாக  நியாபகம் உள்ளது. அந்த போட்டி அகமதாபாத்தில் நடந்த 4-வது போட்டியாகும். அந்த போட்டியில் அஃப்ரிடியின் கேட்சை தவறவிட்டதற்காக தோனியை கடுமையாக திட்டினேன். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே கொஞ்சம் அழுத்தம் அதிகமாக இருக்கும். நான் வீசிய சிக்ஸருக்கு விளாசிய அஃப்ரிடி அடுத்த பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் அது பேட்டின் நுனியில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும், ஸ்லிப் பீல்டர் டிராவிட்டுக்கும் இடையில் சென்றது. அப்போது அந்த கேட்சை தவறவிட்டதாக எண்ணி தோனியை கடுமையாக திட்டிவிட்டேன். அன்று நடந்துகொண்டதை நினைத்து பெருமைப்படவில்லை. அந்த போட்டிக்குப்பின் தோனியுடனும், டிராவிட்டுடனும் சகஜமாகதான் பேசி மகிழ்ந்தேன்’ என தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.