‘ஆமா.. அவரும் UAE வராரு’!.. மாஸ் ‘அப்டேட்’ கொடுத்த ஐபிஎல் அணி.. அப்போ ‘சரவெடி’ தான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணிக்கு நெட் பவுலராக சென்றார். அப்போது சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார். அந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றார்.
இதனை அடுத்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று, கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரிலும் நடராஜன் விளையாடினார். சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் பயிற்சிகளை தொடர்ந்து. சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன் என்றும் அதற்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணிக்க உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நடராஜனும் பயணிக்க உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதன் விளைவாக புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நடராஜன் மீண்டும் விளையாட இருப்பது அந்த அணிக்கு பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்