‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’!.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36-வயதான டு பிளசிஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 10 சதங்கள், 21 அரை சதங்கள் அடித்துள்ளார் . 2016-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற டு பிளசிஸ், 36 போட்டிகளுக்கு அணியை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேப்டன் பதவியிலிருந்து டு பிளசிஸ் விலகினார். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாமல் டு பிளசிஸ் சிரமப்பட்டார்.
இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டு பிளசிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த ஆண்டு அனைவரையுமே வாட்டி எடுத்துவிட்டது. எதுவுமே நிலையில்லாமல் இருந்த நிலையில், எனக்கு பல்வேறு விஷயங்களில் தெளிவு கிடைத்திருக்கிறது. புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்வதற்கு என் மனது தெளிவாக இருக்கிறது.
என்னுடைய தேசத்துக்காக நான் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது. இனிமேல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே என் கவனத்தை செலுத்தப் போகிறேன்.
அடுத்த இரு ஆண்டுகள் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான ஆண்டுகளாகும். என்னுடைய கவனம் அனைத்தும் டி20 உலகக் கோப்பையை நோக்கி இருக்கிறது. அப்படியென்றால் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டேன் என அர்த்தம் இல்லை. குறுகிய காலத்துக்கு டி20 போட்டிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிப்பேன்’. இவ்வாறு டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
டு பிளசிஸ், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை அணி டு பிளசிஸை அணியில் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்