'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி மோதும், போட்டிகள் குறித்த அறிவிப்பும், அதில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் விபரமும் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அம்பதி ராயுடுவின் 3டி கிளாஸ் ட்வீட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்!

அடுத்து நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அதற்காக தற்போது சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த எம்.எஸ்.கே.பிரசாத், உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், தேர்வுக்குழு வகுத்துள்ள சில திட்டங்களை செயல்படுத்துவது ரிஷப் பந்துக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட யோசனைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்படுவதற்கு முன்னர் அம்பதி ராயுடு சேர்க்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நிகழாமல் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

அந்த சமயத்தில் எம்.எஸ்.கே.பிரசாத், ‘ஃபீல்டிங், பௌலிங், பேட்டிங் என முப்பரிமாணத்தில் விளையாடி அணிக்கு உதவுவார் என்று விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தோம்’ என்று கூறியிருந்தார். இதன்பின்னர் உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக 3 செட் 3டி கண்ணாடிகளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்ததாக, அம்பதி ராயுடு ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். இது வைரலானது. 

இதுபற்றி தற்போது விளக்கமளித்துள்ள எம்.எஸ்.கே.பிரசாத், ‘சில காம்பினேஷன்களின் காரணமாக அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஓரவஞ்சனை என்று விமர்சனம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதே சமயம் சமயோஜிதமாக அப்படி ஒரு ட்வீட் போடுவதற்கு அம்பதி ராயுடுவுக்கு எப்படி தோன்றியது என்றே தெரியவில்லை. அவரின் ட்வீட் எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்தது’ என்று பேசியுள்ளார்.

TEAMINDIA, AMBATIRAYUDU, MSKPRASAD