'அந்த ஒரு சம்பவம் போதும்'...அந்த செகண்ட்ல இருந்து 'தோனி ரசிகை'... மனம் திறந்த 'பாகிஸ்தான் நடிகை'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநான் தோனியின் மிகப்பெரிய ரசிகை எனவும், அந்த சிறு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது என, பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

தோனி சரியாக விளையாடவில்லை எனவே அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என அவர் மீது விமர்சனங்கள் எழும் போதெல்லாம், தோனி மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. தோனியின் விளையாட்டு திறனால் மட்டுமல்ல, அவரது செயல்களாலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாக கூறலாம். அது போன்ற ஒரு நிகழ்வு குறித்து பாகிஸ்தான் நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரபல மாடலும் நடிகையுமான மதிரா முகமது தோனியுடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் ''கடந்த 1998-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றன. அப்போது இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நானும் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பிடித்த பாகிஸ்தான் வீரரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக சென்ற போது, அவர் அதை நிராகரித்து விட்டார்.
இதனால் நான் மிகவும் சோகமடைந்தேன். இதனை கவனித்த தோனி, நான் சோகமாக இருப்பதை கவனித்து என்னுடைய ஆட்டோகிராப் வேண்டுமா என்று கேட்டார். நானும் சந்தோஷமாக அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். அதோடு அவரது இருக்கைக்கு அருகில் என்னை அமர வைத்து சிறிது நேரம் என்னிடம் பேசினார். அந்த ஒரு தருணத்தில் நான் தோனியின் மிகப் பெரிய ரசிகையாக மாறி விட்டேன்'' என மனம் திறந்து பேசியுள்ளார்.
தோனி மீது விமர்சனங்கள் எழும் நேரத்தில் எல்லாம், அவருடைய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் முக்கிய சான்றாக உள்ளது.