"முக்கியமான செய்தியை வெளியிடப்போறேன்".. தோனியின் சஸ்பென்ஸ் அறிவிப்பு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேந்திர சிங் தோனி வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றித்தான் இணையதளம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.
தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இடையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கினாலும் அவர், மீண்டும் தோனியிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்.
சஸ்பென்ஸ் போஸ்ட்
இந்நிலையில், தோனி தனது பேஸ்புக் பக்கத்தில்,"நாளை (செப். 25) மதியம் 2 மணியளவில் சில உற்சாமளிக்கும் செய்திகளை நான் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அனைவரும் அதில் பங்கேற்பீர்கள் என நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதுதான் ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் தள்ளியிருக்கிறது. ஓய்வு உள்ளிட்ட விஷயங்களை சர்ப்ரைஸாக வெளியிடுவதே தோனியின் பாணி. ஆனால், தோனியின் இந்த சஸ்பென்ஸ் அறிவிப்பு புதிராகவே இருந்துவருகிறது.
என்னவா இருக்கும்?
தென்னாப்பிரிக்க டி20 லீக் ஜொகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. ஜொகனஸ்பர்க் அணிக்கு தோனி பயிற்சியாளராக செல்லலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை இதைத்தான் தோனி சொல்ல இருக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல ரசிகர்கள் மத்தியில் இன்னொரு அச்சமும் இருக்கிறது.அதாவது ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதை வெளியிட இருக்கிறாரா? என்பதே ரசிகர்களின் அச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. எப்படியோ, தோனி வைத்திருக்கும் சஸ்பென்ஸ் என்ன என்பதை தெரிந்துகொள்ள நாளை மதியம் இரண்டு மணிவரையில் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.
மற்ற செய்திகள்