"உங்க மேல பைத்தியமான ரசிகர்கள் நாங்கள்.. தல ப்ளீஸ்.. நீங்களே.. நல்மதிப்புடன்".. ரசிகர்களின் உருக்கமான கோரிக்கைகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆஃப்க்குத் கூட தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனாலும், அந்த அணியுடனான கடைசி போட்டியில் பேட்டிங்கில் படு சொதப்பு சொதப்பி படுமோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து, இளம் வீரர்களிடத்தில ‘ஸ்பார்க்’பறக்கும் உத்வேகம் எதையும் நாங்கள் காணவில்லை என்று தோனி கூறினார். இதனால் தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குக்கும் எதிராக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது 6 புள்ளிகளுடன் சிஎஸ்கே ஐபிஎல் அட்டவணையின் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஸ்டீபன் பிளெமிங்கையும், தோனியையும் ‘நல்ல மதிப்புடனே தயவு செய்து இப்போதே வெளியேறி விடுங்கள். அதுதான் நல்லது’ என்று கூறி வருவதை காண முடிகிறது.
அந்த பதிவுகளில், “இந்த மோசமான ஆட்டத்துக்குப் பொறுப்பேற்று பிளெமிங்கும் தோனியும் விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது. அவர்கள்தான் யெல்லோ ஆர்மியை முன்னேற்ற முடியும். ஜடேஜா, சாம் கரணை தவிர மற்றவர்களுக்கு விடை கொடுங்கள். 202ல் புதிய நம்பிக்கைகளுடன் கூடிய புதிய தொடக்கமாக சிஸ்கேவுக்கு அது இருக்கட்டும்”, “தோனியின் தீவிர ரசிகனாக இருந்து அவர் இப்படி ஆடுவதை காணும்போது வேதனையாக இருக்கிறது. சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃப்பை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கஷ்ட காலத்தில் எல்லாம் அவருக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் அணிக்காக அவர் விலகி விடுவதே நல்லது”, “அணிக்காக அனைத்தையும் கொடுத்த எம்.எஸ்.தோனி உணர்வுபூர்வமாக அணியுடன் இருக்கிறார். இத்தனை மோசமான நிலையில்அவர் வெளியேறுவதை பார்க்க விரும்பவில்லை. அவர் சிஎஸ்கேவில் இருந்து விலகி ஓய்வாக இருக்கலாம். சிஎஸ்கேவின் நிர்வாகத்திலும் மாற்றம் நிச்சயமாக தேவைப்படுகிறது”, “தோனி, உங்கள் மீது பைத்தியமானவர்கள் நாங்கள். இந்த சீசன் முடிந்ததும் பிரியாவிடை கொடுத்து வெளியேறிவிடுங்கள் தல பிளீஸ்.. ஜெகதீசன் உள்ளிட்ட பல இளம் வீரர்களின் இருப்பு வீணாகிறது” என்பன போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் பலர் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கக் கோரியதுடன், தோனியின் டிசைன்களுக்கு பிளெமிங் வளைந்து கொடுப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்