Breaking: ஓய்வை அறிவித்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மித்தாலி ராஜ்..அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிக்கெட்டை அணியின் நட்சத்திரமாக விளங்கும் மித்தாலி ராஜ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ராஸ்தானில் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பிறந்த மித்தாலி ராஜ்-ன் தந்தை தமிழர் ஆவார். துரைராஜ்-லீலா தம்பதியினரின் மகளான மித்தாலி சிறுவயதில் தனது சகோதரர் மிதுனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்போது கிரிக்கெட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக படிப்படியாக முன்னேறத் துவங்கினார் ராஜ். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், தனது அபாரமான ஆட்டத்தால் மக்களை ஈர்த்தார்.
இதுவரையில் 12 டெஸ்ட், 232 ஒருநாள் போட்டிகள் மற்றும் 89 T20I களில் விளையாடியுள்ள ராஜ், உலகளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக அறியப்படுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50 ஓவர் உலகக் கோப்பையின் போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக ராஜ் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மித்தாலி ராஜ் தற்போது அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திறமையான இளம் வீரர்களின் கைகளில் இந்திய அணி இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாகியுள்ளது. ஆகவே, என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிவிற்கு கொண்டுவர இதுவே சரியான நேரம் எனக் கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னால் முடிந்ததைச் செய்தேன். மூவர்ணக் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் எப்போதும் மதிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் அணியை வழிநடத்தியது பெருமையாக இருந்தது. இது நிச்சயமாக என்னை ஒரு நபராக வடிவமைத்தது மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட்டையும் வடிவமைக்க உதவியது. இந்தப் பயணம் முடிந்திருக்கலாம், ஆனால் நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடவும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மித்தாலி ராஜ் அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,"இந்திய கிரிக்கெட் அணியில் உங்களுடைய பங்களிப்பு மகத்தானது. நெடிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறீர்கள். உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையாக கருதப்படும் மித்தாலி ராஜ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழத்தியுள்ளது.
மற்ற செய்திகள்