தோனியின் மானநஷ்ட வழக்கு: எதிர்த்த ஐபிஎஸ் அதிகாரி... மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி தொடுத்த வழக்கை மறுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தோனியின் மீது பெட்டிங், மேட்ச் ஃபிக்சிங் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்த மீடியா நிறுவனங்கள், தனி நபர்கள், குழுக்கள் என அனைவரது மீதும் தோனி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். மேலும், தன் மீது களங்கம் சுமத்திய காரணத்துக்காக 100 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகவும் கோரி இருந்தார் தோனி.
கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வழக்கு இதுவரையிலும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணையை முதல் கட்டமாக மேற்கொண்டவர் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார். இந்த ஐபிஎஸ் அதிகாரி தான் ஐபிஎல் பெட்டிங், முறைகேடுகள், சூதாட்டங்கள் குறித்து வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
இதனால், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீதும் தோனி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். தான் வழக்கு தொடர்ந்தவர்கள் மீது, ‘போலியான குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத போலி அறிவிப்புகள், அறிக்கைகள், பழி போடும் சாடல்கள்’ ஆகியவற்றை மேற்கொண்டதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார் தோனி. உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் முன்னிலையில் தனக்கு களங்கம் ஏற்படுத்தி தன் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தனக்கு நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றம் சென்றார் தோனி.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் (தற்போது ஓய்வு) மேற்கொண்டு குறிப்பிட்ட நபர்கள் தோனி மீது களங்கம் கற்பிக்கத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தோனியின் மான நஷ்ட வழக்குக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கை கடந்த 2014-ம் ஆண்டு சம்பத் குமார் தொடர்ந்தார்.
பின்னர் சமீபத்தில் இதற்குக் கூடுதலான ஒரு மேல்முறையீட்டு மனுவை சமர்பித்தார் சம்பத் குமார். தன் வாயை அடைக்கும் பொறுட்டே இந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் சம்பத் குமார். தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற சம்பத் குமாரின் கோரிக்கையை நிராகரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது. வழக்கின் போக்கை மாற்றக் கூடிய தலையீடுகளை செய்ய முடியாது என தற்போது நீதிபதி தெரிவித்துவிட்டார்.
மற்ற செய்திகள்