அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டிய ‘புதுப்புயல்’!.. இவர் யாரோட ‘மாணவர்’ தெரியுமா..? அதனாலதான் பந்து சும்மா பறக்குதுபோல..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅறிமுக போட்டியிலேயே இங்கிலாந்து வீரர்களை பதற வைத்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா குறித்து ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் புனேவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்களும், கேப்டன் விராட் கோலி 56 ரன்களும் எடுத்தனர். அதேபோல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்ட்யா 58 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்ட்யா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதில் க்ருணல் பாண்ட்யா மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தங்களது அறிமுக போட்டியிலேயே சாதனை படைத்து அசத்தியுள்ளனர். அதில் க்ருணால் பாண்ட்யா, தனது முதல் ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் (31 பந்துகளில் 58 ரன்கள்) அடித்து அசத்தினார்.
அதேபோல் பிரஷித் கிருஷ்ணா 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தனது அறிமுக போட்டியிலேயே ஜேசன் ராய் (46 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (1 ரன்), சாம் பில்லிங்ஸ் (18 ரன்கள்), டாம் கர்ரன் (11 ரன்கள் ) என 4 முன்னணி வீரர்களை அவுட்டாக்கி கேம் சேஞ்சரராக அமைந்தார். இந்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா யாரிடம் பவுலிங் பயிற்சி மேற்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1980, 90 காலகட்டங்களில் எதிரணியை தனது வேகத்தால் பதற வைத்த ஆஸ்திரிலேய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சனிடம், பிரஷித் கிருஷ்ணா பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஐடிபிஐ பெடரல் பவுலிங் ஃபவுண்டேஷன் சார்பில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் துஷார் பாண்டே ஆகிய 2 வீரர்கள் தாம்சனின் அகாடமிக்கு பயிற்சி பெற ஆஸ்திரேலியா சென்றனர்.
பிரஷித் கிருஷ்ணாவின் தந்தை தனது மகன் குறித்து கூறுகையில், ‘11 வயதில் பிரஷித் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். பள்ளி கிரிக்கெட்டில் அவன் ஆல்ரவுண்டர். 14 வயதில் வேகப்பந்து வீச்சை சீரியஸாக எடுத்துக் கொண்டான். என் மகன் பிரெட் லீ-ன் தீவிர ரசிகன். அவரை போலவே பந்துவீச விரும்புவான். மசாலா தோசை என்றால் அவனும் ரொம்ப பிடிக்கும்’ என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்