எப்படி அவங்க புது ஐபிஎல் அணியை வாங்குனாங்க..? ஏலம் எடுத்த கம்பெனி எங்க ‘முதலீடு’ செஞ்சிருக்காங்க தெரியுமா..? திடீரென குண்டை தூக்கிப் போட்ட லலித் மோடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுதிய ஐபிஎல் அணியை வாங்கிய நிறுவனம் குறித்து லலித் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஐபிஎல் (IPL) தொடரில் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து 2 புதிய ஐபிஎல் அணிகள் இணைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஒரு அணியும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்டு மற்றொரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இதில் லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் (RPSG Group) ரூ.7090 கோடிக்கு வாங்கியது. அதேபோல அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் (CVC Capital Partners) ரூ.5625 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த நிலையில் அகமதாபாத் அணியை வாங்கிய சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் மீது முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி (Lalit Modi) பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், ‘பெட்டிங் நிறுவனங்கள் கூட தற்போது ஐபிஎல் அணியை வாங்கலாம் என்று நினைக்கிறேன். நிச்சயம் இது புது விதியாகதான் இருக்க வேண்டும். ஏலம் எடுத்த நபர் பெரிய பெட்டிங் நிறுவனத்தை வைத்துள்ளார். பிசிசிஐ தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய முடியும்?’ என லலித் மோடி பதிவிட்டுள்ளார்.
i guess betting companies can buy a @ipl team. must be a new rule. apparently one qualified bidder also owns a big betting company. what next 😳😳😳 - does @BCCI not do there homework. what can Anti corruption do in such a case ? #cricket
— Lalit Kumar Modi (@LalitKModi) October 26, 2021
சிவிசி நிறுவனம், தனியார் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் பெட்டிங் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனியைச் சேர்ந்த சூதாட்ட நிறுவனமான டிபிகோ, சிவிசி நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்