IPL 2022 : இதுனால தாங்க ரெய்னா'வ யாரும் எடுக்கல.. வேற ஒரு காரணமும் கிடையாது.. முன்னாள் வீரர் கொடுத்த 'விளக்கம்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க, இன்னும் ஒரு வார காலம் கூட இல்லை. வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளது.
நாட்கள் நெருங்கி வருவதால், அனைத்து அணிகளும் ஏற்கனவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, தங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தர, கடினமாக தயாராகி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதால், ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களை ஒரு முக்கிய சம்பவம், அதிகம் வேதனை அடைய செய்துள்ளது.
வேதனையில் ரசிகர்கள்
கிறிஸ் கெயில், ஏபி டிவில்லயர்ஸ், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரர்கள் இந்த முறை, ஐபிஎல் தொடரில் களமிறங்க போவதில்லை என்பது தான். அதிலும் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர், தாங்களே விலகிக் கொண்ட நிலையில், ரெய்னாவை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிகளும் எடுக்காமல் போனது தான், ரசிகர்களை இன்னும் கடுமையான வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி ஒரு நிலைமை
அவர் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆடியுள்ள சென்னை அணி கூட, ரெய்னாவை எடுக்க முன் வரவில்லை. ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரருக்கு இந்த நிலைமை என்பது, ரசிகர்களை இன்னும் வேதனைக்குள் ஆக்கியது. சில அணிகளில், வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடப் போவதில்லை என அறிவித்த போது, ரெய்னாவை மாற்று வீரராக எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும், அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
விளக்கம் சொன்ன சங்கக்காரா
இதனால், ரெய்னா ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான குமார் சங்கக்காரா, ரெய்னா ஐபிஎல் அணிகளில் தேர்வாகாமல் போனதன் காரணத்தை விளக்கியுள்ளார்.
பல வழிகள் இருக்கு
"ரெய்னா இடம்பெறாமல் போனதை நாம் பல வழிகளில் பார்க்க வேண்டும். ஆண்டுகள் செல்ல செல்ல, அணியிலுள்ள வீரர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அதே போல, இளம் வீரர்களும் புதிதாக உருவாகி வருகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ரெய்னா ஒரு முக்கியமான வீரர் தான். அவர் ஒரு ஜாம்பவான் தான். ஒவ்வொரு சீசனிலும் சிறந்த வீரர் என்ற பெயரை எடுத்துள்ளவர்.
இது தான் விஷயம்
அவர் ஒரு நல்ல வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு புதிய வீரர்களின் வருகையினால் அணி நிர்வாகம், பயிற்சியாளர் என அனைவரும் வருங்கால அணி குறித்த திட்டங்கள் மற்றும் அடுத்த சில ஆண்டுகள் ஆடக் கூடிய வீரர்கள் என்பதைத் தான் அதிகம் கவனித்து அணியினரைத் தேர்வு செய்வார்கள்.
இதை எல்லாம் கணக்கில் வைத்து தான், அவரை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை" என சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்