"இந்த தடவ ஐபிஎல் கப்'ப, எப்டி தட்டித் தூக்குறோம்ன்னு மட்டும் பாருங்க.." அடித்துச் சொல்லும் இந்திய 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணி வீரர்களும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
கடந்த இரு சீசன்களில், தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது வேறு ஏதேனும் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், பல இளம் வீரர்களை அனைத்து அணிகளும் தேர்வு செய்திருந்தது. இதனால், அவர்கள் கூட இந்த சீசனில் முத்திரை பதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்நிலையில், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் குறித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
'இந்த வருடத்திற்கான எங்களது அணி, பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் அதிக பலம் கொண்ட அணியாக விளங்குகிறது. ஹர்பஜன் சிங் மற்றும் சாகிப் அல் ஹசன் போன்ற தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களது அணியில் இணைந்துள்ளது, நிச்சயம் எங்களுக்கு கூடுதல் பலம் தான்.
அதே போல, பல சிறந்த வீரர்கள் அணியில் இணைந்துள்ளது அதிக நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை நாங்கள் கோப்பையை வெல்வோம் என்பதை உறுதியாக நம்புகிறேன்' என்றார்.
தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது பற்றி பேசிய குல்தீப் யாதவ், 'இந்த தொடரில், விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சற்று கடினம் என நான் நினைக்கிறேன். இதனால், எதிரணி வீரர்களை முடிந்த வரை நெருக்கடிக்குள் வைத்துக் கொள்வதே எனது இலக்காக இருக்கும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், நான் சிறப்பாக பந்து வீசவில்லை என்பது உண்மை தான். ஆனால், நிச்சயம் என் மீதான தவறுகளை சரி செய்து கொண்டு, மீண்டும் சிறப்பாக பந்து வீசி அசத்துவேன்' என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்