"பார்த்துட்டே இருங்க... சீக்கிரமே கோலி ஓய்வை அறிவிப்பாரு!"- ஆருடம் சொல்லும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ள விராட் கோலி விரைவில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தே முழு ஓய்வை அறிவிப்பார் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி சுற்றுக்குள் நுழைய முடியாமல் இந்திய அணி வெளியேறியதில் இருந்தே தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இனி வரும் ஆட்டங்களில் இந்திய டி20 அணியின் கேப்டன் ஆக ரோகித் சர்மா தலைமை ஏற்று விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் விராட் கோலி விரைவில் டி20 போட்டிகளில் இருந்தே ஓய்வை அறிவிப்பார் என்ற கருத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தக் அகமது. தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் சில பிரச்னைகள் நீடிப்பதாகவும் முஸ்தக் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஸ்தக் அகமது கூறுகையில், “ஒரு வெற்றிகரமான அணியின் கேப்டன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்றால் அப்போது அந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம்-க்குள் ஏதோ ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். நான் பார்த்த வரையில் இந்திய அணியில் தற்போது இரண்டு பிரிவுகள் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. மும்பை பிரிவு மற்றும் டெல்லி பிரிவு என இரண்டு உள்ளன. டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன கோலி விரைவில் டி20 போட்டிகளில் இருந்தே முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பார். ஆனால், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் கோலி விளையாடுவார் என்றே நினைக்கிறேன். கேப்டன் பதவி விலகல் அறிவிப்பு என்பது டி20 முழு ஓய்வை கோலி அறிவிக்கும் நாள் நெருங்கிறது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான முக்கியக் காரணமே ஐபிஎல் தான். ஐபிஎல் விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக பயோ- பபிள் வாழ்க்கை முறையை இந்திய வீரர்கள் பின்பற்றி மிகவும் களைப்படைந்து உள்ளார்கள். அதுதான் அவர்களை மிகவும் பாதித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்