‘இது முற்றிலும் தவறு’!.. விராட் கோலி மீது விழும் விமர்சனங்கள்.. அஸ்வின் கொடுத்த ‘தரமான’ பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடர்பாக விராட் கோலி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டனில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மழை குறுக்கீட்டுக்கு மத்தியில் நடந்த இப்போட்டியை டிரா செய்திருக்கலாம் என்றும், இந்திய அணி இதை கோட்டை விட்டுவிட்டது என்றும் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 3 போட்டிகளாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. மேலும் ஒரு போட்டியின் மூலம், உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை தீர்மானிக்க முடியாது என ஐசிசி மீது கோலி குற்றம் சுமத்தியதாக தகவல்கள் வெளியாகின. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததன் வெளிப்பாடாகவே கோலி இவ்வாறு பேசுவதாக பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கோலி மீதான இந்த விமர்சனங்களுக்கு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகளாக நடத்த வேண்டும் என கோலி கோரிக்கை வைத்தாக பேசப்பட்டு வருவதை அறிந்தேன். இது முற்றிலும் தவறான செய்தி. இப்போட்டி முடிந்த பின், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் என்ன மாற்றம் செய்திருக்கலாம் என விராட் கோலியிடம் மைக்கேல் ஆதர்டான் கேட்டார். அவரது கேள்விக்கு மட்டுமே 3 போட்டிகளாக நடைபெற்றிருந்தால் நன்றாக இருக்கும் என விராட் கோலி கூறியிருந்தார். அப்போதுதான் அணிகளின் பலம் தெரியும். மற்றபடி அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்திய அணியின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். கொரோனா ஊரடங்கிற்கு பின் ஒரு நல்ல செய்தியை கேட்க கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த ஐசிசி தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என அஸ்வின் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்