சிறு வயது நட்பு.. ராஞ்சி முதல் இந்தியா டீம் வரை.. நெகிழ வைத்த கே எல் ராகுல் - மயங்க் அகர்வால்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசெஞ்சுரியன் : இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் - மயங்க் அகர்வால் ஆகியோர் இடையேயுள்ள நட்பின் சுவாரசியத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
நம்முடைய சிறு வயதில், நமக்கு மிகவும் நெருங்கிய ஒரே ஒரு நண்பன் இருப்பான். வாழ்நாள் முழுவதும், கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், அவனுடன் ஒரே துறையில் இணைந்து சாதிக்க வேண்டும் என்ற கனவுடனும், குறிக்கோளுடனும் இருப்போம். அப்படிப்பட்ட பால்ய காலத்து ஏக்கம், அனைவரது வாழ்விலும் நிறைவேறி விடாது.
ஆனால், ராகுல் மற்றும் மயங்க் ஆகியோரின் நட்புப் பாதையில், அது அரங்கேறவும் செய்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இவர்கள், ஒரே பள்ளி அணி, ஒரே கல்லூரி அணி என கிரிக்கெட் போட்டிகளில் இணைந்தே ஆடியுள்ளார். தொடர்ந்து, கர்நாடக ராஞ்சி அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இந்திய அணியிலும், ஒன்றாக ஆடி அசத்தியுள்ளனர்.
கே எல் ராகுல் - மயங்க் அகர்வால்
மேலும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய இருவரும், பல்வேறு போட்டிகளில், எதிரணியினரின் பந்து வீச்சினை சுக்கு நூறாக்கியுள்ளனர். தற்போது, இந்தியாவின் சர்வதேச அணியிலும் ஒன்றாக ஆடி அசத்தியுள்ளனர். முதல் தரம் மற்றும் உள்ளூர் போட்டிகளில், ஒன்றாக இவர்கள் பட்டையைக் கிளப்பியிருந்தாலும், சர்வதேச போட்டிகளில் இணைந்து ஆடும் வாய்ப்பு, ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோருக்கு எளிதில் அமைந்து விடவில்லை.
சர்வதேச போட்டியில் அறிமுகம்
கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் மூலம், இந்திய அணியில் அறிமுகமானார் கே எல் ராகுல். ஆனால், மறுபக்கம், மயங்க் அகர்வால், ராஞ்சி போட்டிகளில் தான் ஆடி வந்தார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலுக்கு, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 2017 - 2018 ஆகிய சமயத்தில், டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றம் கண்டார் ராகுல்.
வாய்ப்பை பறித்த நண்பன்
2018 - 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி ஆடியது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், மோசமாக ஆடிய ராகுலுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக, அவரது நீண்ட நாள் நண்பரான மயங்க் அகர்வால், சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மயங்க், 76 மற்றும் 42 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இணைந்த நட்பு
தன்னுடைய வாய்ப்பு போய், நண்பனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போதும், தன் நண்பனின் சரவதேச அறிமுக போட்டிக்கு, வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் ராகுல். தொடர்ந்து, அதே தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார். இதனால், ராகுலுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.
சிறப்பம்சம்
இந்த போட்டியில், கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டெஸ்ட் போட்டியில், இந்திய தொடக்க வீரர்களாக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், களமிறங்கியது இது தான் முதல் முறை. ஒரே மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்பதைத் தாண்டி., ராகுல் மற்றும் மயங்க் ஆகிய இருவரும், நீண்ட கால நண்பரகள் என்பதே, இந்த தொடக்க ஜோடியின் சிறப்பம்சமாக இருந்தது.
மீண்டும் இணைந்த நண்பர்கள்
ஆனால், அந்த போட்டியில், 9 ரன்களில் ராகுல் அவுட்டாக, நீண்ட நேரம், நெருங்கிய நண்பர்களின் பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. அதன் பிறகு, இந்திய அணியில், ராகுல் மற்றும் மயங்க் என இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்நிலையில் தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே, தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், இருவரும் அணியில் தேர்வானார்கள்.
மாஸ் காட்டிய நண்பர்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. மேலும், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே எல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி, 117 ரன்கள் குவித்து சாதனை புரிந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில், 100 ரன்களுக்கு மேல், பார்ட்னர்ஷிப் அமைத்த மூன்றாவது இந்திய தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்த இவர்கள், செஞ்சுரியன் மைதானத்தில், 100 ரன்களுக்கு மேல் எடுத்த, இரண்டாவது இந்திய தொடக்க ஜோடி என்ற சாதனையையும் புரிந்தது.
நட்பின் இலக்கணம்
தங்களது பள்ளிப் பருவம் தொடங்கி, ஒன்றாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்த கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால், தொடர்ந்து பல தரப்பிலான உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என இன்று சர்வதேச போட்டிகள் வரை காலடி பதித்துள்ளனர்.
ஒரே லட்சியத்துடன் பயணித்த இரு நண்பர்கள், பல்வேறு தடைகளையும் தாண்டி, தங்களின் விடாமுயற்சியால், இன்று சாதித்தும் காட்டியுள்ளது, நட்பிற்கு ஒரு இலக்கணமாக விளங்குகிறது.
மற்ற செய்திகள்