‘முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணா எப்படி..!’.. KKR வீரருக்கும் ‘அபராதம்’ விதித்த போலீசார்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா ஊரடங்கின் போது காரில் ஊர் சுற்றி வந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரீயர் ஆகியோருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து சிஎஸ்க பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் சாஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இப்படி வீரர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளானதால், ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர் ராகுல் திரிபாதி ஊரடங்கை மீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ராகுல் திரிபாதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வருகிறார். தற்போது மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ஜுன் 15-ம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் திரிபாதி நேற்று எந்தவித சரியான காரணமும் இன்றி காரில் வெளியே சுற்றி வந்துள்ளார். கோத்வா பகுதியில் காரில் சுற்றி வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி எதற்காக வெளியே வந்தீர்கள் என போலீசார் கேட்ட கேள்விக்கு ராகுல் திரிபாதி சரியான பதிலை கொடுக்கவில்லை. மேலும் அவர் மாஸ்க் அணியாமல் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பிரபலங்கள் முன்னுதாரணமாக விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்களே இப்படி செய்வது மோசமான உதாரணம் ஆகிவிடும் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்