வெளிநாட்டு வீரர்கள் ஏன் விலகிட்டே இருங்காங்க..? என்ன காரணம்..? ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து விலகுவதற்கான காரணம் குறித்து டேவிட் ஹஸ்ஸி விளக்கமளித்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 21 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் உள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்களையும் சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன்காரணமாக பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்டசன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் திடீரென விலகுவதாக தெரிவித்தனர். முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப் பாதியிலேயே விலகினார்.
தொடர்ந்து வீரர்கள் விலகி வருவதால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர்கள் நடைபெறும் என்றும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கு தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து விலகுவதற்கான காரணம் குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆலோசகரும், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருமான டேவிட் ஹஸ்ஸி (David Hussey) விளக்கமளித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப விருப்பம் காட்டுவதற்கு பயம்தான் காரணம். பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் செய்திகளை பார்க்கின்றனர். அதில், ஒவ்வொரு மணி நேரத்துக்கு பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு பயம் இன்னமும் அதிகரிக்கிறது.
அதனால்தான் அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு செல்கின்றனர். ஆனாலும் சில வீரர்கள் பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் முடியும் வரை விளையாடுவதாக உறுதியளித்துள்ளனர். இதுபோன்ற கடினமான நேரங்களில் மக்களுக்கு மனரீதில் மகிழ்ச்சி தேவை. நாங்கள் விளையாடுவதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தால், அதுவே எங்களுக்கு போதும்’ என டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்