Video: 'வச்சு' செய்றதுன்னா இதானா?... 'ஸ்லெட்ஜிங்' செய்த ஆஸ்திரேலிய வீரருக்கு... செம 'நோஸ்கட்' கொடுத்த இளம்வீரர்... ரசிகர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 4 முறை கோப்பையை வென்ற அணியுமான இந்திய அணி இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்தது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே செம அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன்-அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை இந்திய வீரர் கார்த்திக் தியாகியின் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி இழந்தது.
தொடர்ந்து 2-வது ஓவரையும் கார்த்திக் தியாகியே வீச வந்தார். அப்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. கார்த்திக் தியாகியின் முதல் பந்தை சந்தித்த ஆலிவர் டேவிஸ் அந்த பந்தை அடிக்காமல் விட்டுவிட அந்த பந்து விக்கெட் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது. இதையடுத்து கார்த்திக் தியாகிக்கு நேராக பேட்டை உயர்த்தி அவரை ஆலிவர் டேவிஸ் தேவையில்லாமல் ஸ்லெட்ஜிங் செய்தார்.
Moral: Don't Sledge an Indian#Tyagi #INDvAUS #U19CWC pic.twitter.com/2lRWen15nh
— Ragul Ravichandran (@nobodiehere) January 28, 2020
பதிலுக்கு அவரை நேருக்கு நேராக உற்றுப்பார்த்த தியாகி எதுவும் பேசாமல் எல்லைக்கோட்டுக்கு அருகில் சென்று ஓடிவந்து, தன்னுடைய 2-வது பந்தை வீசினார். அந்த பந்தை டேவிஸ் அடிக்க சரியாக அந்த பந்து பீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது. இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள் இந்தியர்களிடம் வைத்துக் கொண்டால் இப்படித்தான் நடக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கார்த்திக் தியாகி 8 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து முதல் அணியாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து 29-ம் தேதி நடைபெறும் 2-வது கால் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகளும், 30-ந்தேதி நடைபெறும் 3-வது கால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா- வங்காள தேசம் அணிகளும், 31-ந்தேதி நடைபெறும் 4-வது கால் இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.