‘தோத்தாலும் நண்பேன்டா தான்’!.. விராட் கோலியுடனான நீண்டகால நட்பு.. மனம் திறந்த கேன் வில்லியம்சன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனான நட்பு குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது நியூஸிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனான நட்பு குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘விராட் கோலியும் நானும் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம். விளையாட்டு ஒரு பகுதி என்றால், எங்களது நட்பு மற்றொரு பகுதி. எங்களுக்கு உலகெங்கிலும் உள்ள மக்களை சந்திப்பதற்க்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் கிடைத்த அனுபவங்களின் மூலம் வெவ்வேறு நட்புகள் உருவாகி வருகின்றன’ என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றபின், வீரர்களை சற்று அமைதியாக கொண்டாட வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் என் பேச்சை அதிகம் கேட்கவில்லை. நிறைய உற்சாகம் இருந்தது, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் முழு கலவையாக அந்த கொண்டாட்டம் இருந்தது’ என கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் U-19 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு, கோலி தலைமையிலான இந்திய U-19 அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போது, அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து U-19 அணி தோல்வி அடைந்தது. தோற்றாலும், அவர் அப்போதிலிருந்தே கோலியுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு, நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, டி20 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, பவுண்டரி லைனில் இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்