‘இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து’... ‘ஆஸ்திரேலிய முக்கிய வீரர் விலகல்’... ‘விராட் கோலி போலவே விருப்பம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடரில் இருந்து, அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
ஐபில் தொடரை முடித்த கையோடு, நவம்பர் 12-ம் தேதி இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 27-ம் தேதியும், டிசம்பர் 17-ம் தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ட்ரெவர் ஹான்ஸ் கூறும்போது, ‘தனக்கு புதிதாக பிறந்த குழந்தையுடனும், மனைவியுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்பி, போட்டிகளில் இருந்து விலகுவதாக கேன் ரிச்சர்ட்சன் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து ஒட்டுமொத்த தேர்வுக்குழுவினரின் அனுமதியுடன் அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். மேலும், ‘நாங்கள் எப்போதும் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் உறுதுணையாக இருப்போம். கேன் ரிச்சர்ட்சனை அணி நிச்சயம் மிஸ் செய்யும். ஆனாலும் அவரின் கோரிக்கையை மதித்து அவருக்கு உறுதுணையாக இருப்போம்’ என்று ட்ரெவர் ஹான்ஸ் தெரிவித்தார்.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் இருந்தும், மனைவியின் குழந்தை பிறப்புக்கு காரணமாக, கேன் ரிச்சர்ட்சன் பங்குபெறாமல் விலகியிருந்தார். இதேபோல், தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், ஆஸ்திரேலிய அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், பிசிசிஐ அனுமதியுடன் விராட் கோலி நாடு திரும்புகிறார்.
இதனை பலரும் விமர்சித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக விராட் கோலி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்காக அவர் மீது அதிக மரியாதை கொள்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்