'கொஞ்சம் ஜாஸ்தியா மரியாதை கொடுத்து ஆடிட்டாங்க... இந்திய பேட்டிங்கை கிண்டலடித்த முன்னாள் கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு, இந்திய அணியினர் அதிக மரியாதை தந்து விளையாடியதாக முன்னாள் கேப்டன் கிண்டலாக கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று சௌதாம்டனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானிற்கு எதிரானப் போட்டியில், இந்திய வீரர்கள் சாதனை படைக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல், இந்திய வீரர்கள் திணறினர். பின்னர் போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ‘இந்தியாவின் அபார பேட்டிங் வரிசை, ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடத் தவறிவிட்டது. பிட்ச் மெதுவான ஆட்டத்துக்கு ஒத்துழைத்தது என்றாலும், மிடில் ஆர்டர் வரிசை சொதப்பியது. மேலும் சுதந்திரமாக ஆடியிருக்கலாம்.
ஆப்கன் வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால், இந்திய வீரர்கள் கொஞ்சம் அதிகம் மரியாதை கொடுத்துவிட்டார்கள். குறிப்பாக ஆப்கன் வீரர்களான முகமது நபி முஜிப்பூர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி, இந்திய அணியை 224 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். எனினும், இந்திய அணி வெற்றிபெற்றது அதுதான் ரொம்ப முக்கியம். கேப்டன் கோலி சிறந்த தலைமையை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டித் தந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.