ஈவு இரக்கமே இல்லாம... இந்திய அணியை கதறவிட்ட ஜோஸ் பட்லர்!.. கோலியின் அதிரடியை மீறி... இப்படி ஒரு சம்பவமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், ஜோஸ் பட்லர் செய்த தரமான சம்பவத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகி ராகுல் ஏமாற்றம் அளித்தார். இஷான் கிஷன் 4, ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க 24 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 25 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயரும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டே வந்தாலும் தனி ஆளாக விராட் கோலி வானவேடிக்கை காட்டினார்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் பின்னர் விஸ்வரூபம் எடுத்து அதிரடி காட்டினார். ஜோர்தன் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் கடந்த பின்னர், அவர் ஆர்ச்சர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதில், 4 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலிக்கு இறுதியில் ஒத்துழைப்பு அளித்த ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 157 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேஸன் ராய் 9 ரன்னில் ஆட்டமிழக்க, டேவிட் மாலன் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சற்றும் தளராமல் தொடர்ந்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை திக்குமுக்காட வைத்தார் ஜோஸ் பட்லர். அவர் சிக்ஸர், பவுண்டரிகளாகவும் அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ரன்களை குவித்தார். அவரது அதிரடி இந்திய அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. அவருக்கு துணையாக ஜானி பேரிஸ்டோவ்வும் அதிரடி காட்டினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் பேரிஸ்டோவ் 5 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
மற்ற செய்திகள்