நாங்க தான் ஜெயிப்போம்னு நெனச்சேன்... ஆனா திருப்புமுனையே இங்கதான் நடந்தது.. புலம்பும் ஜோ ரூட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக காரணத்தை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விளக்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து 290 ரன்களை எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 466 ரன்களை குவித்தது. இதன்மூலம் 367 ரன்களை முன்னிலை பெற்றது. இதனை அடுத்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. ஆனால் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ‘இன்றைய போட்டியை நினைத்தால் கோபமாக உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே நினைத்தோம். ஆனால் இந்தியா பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய ஆரம்பித்தனர். இதுதான் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முதல் இன்னிங்ஸில் முன்னணியில் இருந்தோம். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும். நாங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை இன்னும் கொஞ்சம் சரியாக கையாண்டிருக்க வேண்டும். உண்மையில் இந்திய அணியின் பவுலிங் உலகத்தரம் வாய்ந்ததுதான். தோல்வி அடையும்போது டாஸ் குறித்து கேள்வி எழவே செய்யும்.
நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கருணையின்றி விளையாடியிருக்க வேண்டும். 200 ரன்கள் முன்னிலை பெற்று பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனாலும் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்தான்’ என ஜோ ரூட் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. விக்கெட் ஏதும் விழாமல் இருந்ததால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே கருதப்பட்டது. ஆனால் ஷர்துல் தாகூர் வீசிய 41-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதனால் அடுத்த 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
மற்ற செய்திகள்