‘இது வெறும் நகைச்சுவைதான், யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்’!.. ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
14-வது ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், டு பிளிசஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனால் 7 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து சென்னை அணி தடுமாறியது.
இதனை அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில், 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்த மொயின் அலி, அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு 23 ரன்களில் அவுட்டாகினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும், சுரேஷ் ரெய்னா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கர்ரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதில் சாம் கர்ரன் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 26 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, 18.4 ஓவர்களில் 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 85 ரன்களும், ப்ரீத்வி ஷா 72 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ட்விட் ஒன்று செய்தார். அதில், ‘இதுதான் வித்தியாசம். ஜெய் ஜெய் பால்கனி. இதுவெறும் நகைச்சுவை தான் யாரும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என சேவாக் பதிவிட்டார்.
This is the difference. Jai Jai Balcony.
Mazaak hai, jyada seriously mat lo.#CSKvsDC pic.twitter.com/j3o94XARhY
— Virender Sehwag (@virendersehwag) April 10, 2021
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரின்போது, சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொள்ளையர்களின் தாக்குதலால் உயிரிழந்தார். இதனால் அந்த ஐபிஎல் தொடரிலில் இருந்து விலகுவதாக தெரிவித்த ரெய்னா, உடனே இந்தியா திரும்பினார்.
அதேபோல் ஹோட்டலில் பால்கனியுடன் கூடிய அறை வழங்கப்படவில்லை என சிஎஸ்கே நிர்வாகத்துடன் ரெய்னா கோபித்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக ‘ஜெய் ஜெய் பால்கனி’ என சேவாக் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்