"அவரை அவுட் எடுக்குறது ரொம்ப 'ஈஸி'.. 2 'Trick' மட்டும் போதும்.." 'ரோஹித்'தை திணறடிக்க, 'அமீர்' சொல்லும் 'ரகசியம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த முகமது அமீர் (Mohammad Amir), தனது 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்றும், நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், மனதளவில் தன்னை துன்புறுத்தினார்கள் என்றும் கூறி, தான் ஓய்வு பெற்றதாக அமீர் கூறியிருந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் குறுகிய காலமே, சர்வதேச போட்டிகளில் அமீர் ஆடியிருந்தாலும், அவர் சில போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவிலும் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 338 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், ரோஹித், கோலி, தவான் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்து, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் அமீர். இதன் பிறகு, சரிவிலிருந்து மீளாத இந்திய அணி, 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அது மட்டுமில்லாமல், மேலும் சில போட்டிகளிலும், கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு அமீர் பந்து வீசி அச்சுறுத்தலாக இருந்துள்ளார். இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள அமீர், 'ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு பந்து வீசுவது அத்தனை கடினமாக எனக்கு அமைந்ததில்லை. கோலிக்கு சில சமயம் மட்டும் கடினமாக தோன்றும். ஆனால், ரோஹித் ஷர்மாவிற்கு பந்து வீசுவது என்பது எனக்கு மிகவும் சுலபமாக தான் இருந்தது.
அவரை இரண்டு வழிகளில் எளிதில் அவுட்டாக்க முடியும். இடதுகை பந்து வீச்சாளர்கள் வீசும் இன் ஸ்விங் பந்துகளுக்கும், அதே போல வேகமாக போடப்படும் அவுட் ஸ்விங் பந்துகளுக்கும் ரோஹித் அதிகம் திணறுவார். அப்படித் தான் அவரை எளிதில் அவுட் எடுப்பேன்' என அமீர் தனது விக்கெட்டின் ரகசியம் உடைத்துள்ளார்.
மேலும், யாருக்கு பந்து வீச தனக்கு மிகவும் கடினமாக அமைந்தது என்பதை பற்றி பேசிய அமீர், 'ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீச தான், நான் மிகவும் கடினமாக உணர்ந்துள்ளேன். ஏனென்றால், அவரது பேட்டிங் டெக்னிக் மிகவும் கடினமானது. அவர் பேட்டிங் செய்யும் ஸ்டைலை வைத்து, அவருக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்பதே சரியாக தெரியாமல் போய் விடும்' என அமீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்