துணைக் கேப்டன் பதவி கிடைக்கலைன்னு ‘வருத்தம்’ இருக்கா..? அஸ்வின் சொன்ன அசத்தல் பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் துணைக் கேப்டன் பதவி கிடைக்காதது வருத்தமாக உள்ளதா? என்ற கேள்விக்கு அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் போன்ற முன்னணி வீரர்களை அவுட்டாக்கி அசத்தினார். அதேபோல் பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து பத்திரிகையாளர் ஒருவரிடம் கலந்துரையாடிய போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது இந்திய அணியை ஆஸ்திரேலியா குறைத்து மதிப்பிட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஸ்வின், எனக்கு சரியாக தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் என்ன கூற விரும்புகிறேன் என்றால், அவர்கள் நிச்சயம் குறைத்து மதிப்பிட்டிருக்கிற மாட்டார்கள். நமது பந்து வீச்சாளர்கள் சவால் அளிக்கும் வகையில் செயல்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பிறகு, அதிலிருந்து மீள குறுகிய காலத்திற்குள் நாம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டோம். அடுத்த ஒவ்வொரு போட்டிகளிலும் இந்திய அணி சவாலளிக்கும் வகையில் விளையாடியது என கூறினார்.
இதனை அடுத்து பேட்டிங் தொடர்பாக எழும் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த அஸ்வின், 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்தே எனது பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவிப்பது எளிதல்ல. இதைச் சிலர் புரிந்துகொள்வது கிடையாது. பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். சில இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை எனக் கூறி அணியிலிருந்து நீக்குவது சரியானதல்ல. பந்துவீச்சில் நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதைப் பாருங்கள். வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன். சிறந்த ஸ்பின்னர் என சொல்லும் அளவிற்குப் பல சாதனைகளைப் படைத்துள்ளேன்.
தொடர்ந்து அணியில் துணைக் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என வருத்தம் உள்ளதா? என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அஸ்வின், இல்லை. என்னுடைய திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். கேப்டனது பொறுப்பு, அணி இக்கட்டான நிலைக்குச் செல்லும்போது வீரர்களை உற்சாகமாக வைத்திருப்பதுதான். களத்தில் சக வீரருக்கு உதவி செய்வதும் தலைமைத்துவம்தான்.
சிறந்த கேப்டன் கோலியா, ரஹானேவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், யாரையும், யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. இந்திய அணியில் திறமையான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருப்பதால்தான் கடந்த காலங்களில் சில அற்புதமான வெற்றிகளைப் பெற்றதாக நான் கருதுகிறேன். விராட் கோலி, ரஹானே இருவரும் சிறந்தவர்கள். கேப்டன்சியில் அவ்வளவாக மாற்றங்கள் எதுவும் இல்லை என அஸ்வின் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்