‘என் பல்லு உடைஞ்சிருச்சு.. அதுக்கு ஐபிஎல்ல காரணம் சொல்ல முடியுமா..?’ மான்செஸ்டர் டெஸ்ட் ரத்து சர்ச்சை.. முன்னாள் இந்திய வீரரின் ‘அல்டிமேட்’ கலாய்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பிசியோ நிதின் படேல் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ-ம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்தது. ஆனால் ஐபிஎல் தொடரை மனதில் வைத்து தான் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருவேளை அப்போட்டியில் விளையாடிய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஐபிஎல் தொடர் பாதிக்கப்படுமே என டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை அழைக்க தனி விமானங்களை அனுப்பி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். தொடர் ஆரம்பிக்க இன்னும் 7 நாட்களே உள்ளன. ஐபிஎல் தொடரை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்’ என பிசிசிஐயை மறைமுகமாக சாடி பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ‘என் பல்லு உடைஞ்சிருச்சு, அதுக்காக ஐபிஎல் தொடரை காரணம் சொல்ல முடியுமா?’ என விமர்சனங்களுக்கு கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
My tooth fell of,can I blame the @IPL ?? #easytarget
— Irfan Pathan (@IrfanPathan) September 11, 2021
மற்ற செய்திகள்