'எங்க ஊருக்கு வாங்க... புடிச்சிருந்தா விளையாடுங்க!.. ஆனா ஒரு கண்டிஷன்'... ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்க... பிசிசிஐ-க்கு வந்த ஜாக்பாட் கால்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டே நடத்த பிசிசிஐக்கு சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் தடைபட்டுள்ளன.
ஐபிஎல் தொடர் மூலம் ஆண்டு தோறும் பிசிசிஐக்கு சுமார் ரூ.4000 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு மீதமுள்ள பாதி தொடரை நடத்தி முடிக்காவிட்டால் சுமார் ரூ. 2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனவும், போட்டிகளை நடத்த விரைவில் வேறு இடம் பார்க்கப்படும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
இதற்காக அஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து நாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளலாம் எனவும், செப்டம்பரில் மைதானங்கள் ஒதுக்கப்படும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த பிசிசிஐயின் தேர்வில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது என்பது தெரியும். ஆனால் போட்டிகள் இலங்கையில் நடத்த முடியாது எனக்கூற எந்த காரணமும் கூறமுடியாது. இலங்கையில் வரும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் வரை லங்கா ப்ரீமியர் லீக் ( LPL) தொடர் நடத்த திட்டமிட்டு வருகிறோம். எனவே, செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்திக்கொள்ள மைதானங்கள் மற்றும் இதர விஷயங்கள் தயார் நிலையில் இருக்கும்.
அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளதை நம்பி பிசிசிஐ-ம் தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்காது என தெரிகிறது. ஏனெனில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தேர்தல் வரும் மே 20ம் தேதி நடைபெறுகிறது. எனினும், புதிய உறுப்பினர் குழு பதவிக்கு வந்தாலும், ஐபிஎல் குறித்து இதே நிலைப்பாட்டை தான் எடுக்கும் எனக்கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்