"நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல!!!"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளின்போது விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இடையே நடந்த சர்ச்சை சம்பவம் குறித்து சூர்யகுமார் முதல்முறையாக பேசியுள்ளார்.
முன்னதாக நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவிக்க, அடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதற்கிடையே அந்தப் போட்டிக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாத நிலையில், மும்பை அணி பேட்டிங் செய்தபோது 13வது ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. டேல் ஸ்டெயின் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை எக்ஸ்டரா கவர் பகுதியில் நின்றுகொண்டிருந்த விராட் கோலியிடம் சூர்யகுமார் அடிக்க, அந்தப் பந்தை அவர் எடுத்து வந்தபோது இருவரும் முறைத்து கொண்ட சம்பவம் நடந்து பல விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக அந்த சர்ச்சை சம்பவம் குறித்து மும்பை வீரர் சூர்யகுமார் பேசியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர், "அந்தப் போட்டியில் நான் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித் தர வேண்டிய அழுத்தத்தில் இருந்தேன். அதில் நாங்கள் ஜெயித்துவிட்டால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிவிடுவோம் என்ற நிலை இருந்தது. எனவே ரன்கள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். மேலும் அப்போது விராட் கோலியை முறைத்த அந்த சம்பவம் இருவர் தரப்பிலும் இயல்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலியை பெரிய ஊக்கமாக கருதுகிறேன்.
அத்துடன் அவருடைய உற்சாகம், ஆதிக்கம் செலுத்தும் பங்கு ஆகியவற்றை மும்பைக்கு எதிரான போட்டியில் மட்டுமல்ல அவர் இந்தியாவிற்காக விளையாடும் போட்டியிலும் பார்க்க முடியும். போட்டி முடிந்து அவர் எப்போதும் போலவே பேசினார். நான் நன்றாக விளையாடியதைக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அன்று நடந்த அந்த சம்பவம் அவ்வளவு பெரியது ஒன்றும் இல்லை. அது அந்த தருணத்தின் அழுத்தத்தில் தான் நடந்தது. ஆனால் அது அவ்வளவு பெரிதாக பேசப்படுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதை அறிந்து எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்