'ஜெயிக்குறமோ... தோக்குறமோ... மொதல்ல சண்டை செய்யணும்'!.. தனி ஆளாக களத்தில் இறங்கிய பண்ட்!.. கையில் எடுத்த புது வியூகம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணி பவுலர்களிடம் சிக்கி திணறிய டெல்லி அணியை கேப்டன் ரிஷப் பண்ட் தனி ஆளாக போராடி மீட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிக்கி திணறி வருகிறது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி பவர் ப்ளேவின் (6 ஓவர்களுக்குள்) 3 விக்கெட்களை இழந்து 36 ரன்களே எடுத்து அதிர்ச்சியளித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (9), ப்ரித்வி ஷா (2), ரஹானே (8) எடுத்து வெளியேறினர்.
டெல்லி அணியின் டாப் ஆர்டர் 3 விக்கெட்களையும் ராஜஸ்தான் அணி பவுலர் உனத்கட் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 37 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து டெல்லி அணி தடுமாறி வந்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், பின்னர் அறிமுக வீரர் லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்து பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ராகுல் தேவட்டியா வீசிய 11வது ஓவரில் 4 பவுண்டரிகளை துரத்தி அசத்தினார்.
இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 77 ஆக உயர்ந்தது. சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் உடனடியாக அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பண்ட் 51 ரன்கள் எடுத்திருந்த போது ரியான் பராக் வீசிய பந்தை அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் மீண்டும் டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்