சீனியர் ப்ளேயர்ஸ் இருந்தும்... ரிஷப் பந்த்-ஐ தேர்ந்தெடுத்தது ஏன்?.. கேப்டன் பதவி வரமா? சாபமா?.. பாண்டிங் முடிவு இந்திய அணிக்கு ஒரு சவால்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தச் சிறிய வயதில் பேட்டிங்கில் பெரிய வளர்ச்சி நிலையில் இருந்து வரும் அதிரடி வீரர் ரிஷப் பந்த்துக்கு விக்கெட் கீப்பிங்குடன் கேப்டன்சி சுமையையும் டெல்லி கேப்பிடல்ஸ் அளித்துள்ளது அவருக்கு வரமா, சாபமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று டெஸ்ட் தொடரை 2- 1 என்று கைப்பற்றியது. இதில் ரிஷப் பந்த்தின் திறமைகள் பெரிய அளவில் வெளிப்பட்டது.
தொடர்ச்சியாக இங்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த், 11, 58 நாட் அவுட், 8, 1, 101 என்று வெளுத்து வாங்கி சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்.
ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ரிஷப் பந்த்தின் ஸ்கோர் 36, 97, 23, 89 நாட் அவுட், 91, 11, 58 நாட் அவுட், 8, 1, 101 என்று பட்டையை கிளப்பியுள்ளார், டி20, ஒருநாள் தொடரிலும் அருமையாக ஆடி வருகிறார். இவரைக் கண்டு உலக அணிகளே பயந்து போயிருக்கின்றன, விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், சச்சின், லாரா, சேவாக், ஜெயசூரியா, கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்த படியாக எதிரணியினரிடத்தில் கிலியை உருவாக்கிய வீரர் ரிஷப் பந்த்.
இந்நிலையில், அவரை இந்த வயதில் ஹை பிரஷர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக்கியுள்ளார் ரிக்கி பாண்டிங். இதன் நோக்கம், ரிஷப் பந்த்தின் வளர்ச்சியா அல்லது அவரது பேட்டிங் பார்மைக் காலி செய்வதா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏனெனில், ரிக்கி பாண்டிங் ஒரு ஆஸ்திரேலியர், கடந்த இரு முறையும் டெஸ்ட் தொடரை அங்கு போய் இந்திய அணி வென்றுள்ளது, அதில் அவர் புலம்பியதைப் பலரும் கேட்டோம். ஏன் அஸ்வின் இருக்கும்போது பார்மில் உள்ள இளம் வீரரை அவர் கேப்டனாக்க வேண்டும்?
இதற்கு ரிக்கி பாண்டிங் கூறுவதென்னவெனில், "ஷ்ரேயஸ் அய்யர் இந்தத் தொடரில் இல்லாதது நிச்சயம் வருத்தமே. ரிஷப் பந்த் கேப்டன்சி வாய்ப்பை இருகரம் கொண்டு பற்றுவார் என்று நம்புகிறேன். அவரது சமீபத்திய ஆட்டத்திற்கான பரிசே இந்த கேப்டன்சி. அதே வேளையில் கேப்டன்ஷிப் அவரை இன்னும் தேர்ந்த வீரராக மாற்றும்" என்கிறார்.
ஆனால், சிறந்த வீரர்கள் சிறந்த கேப்டன்களாக இருந்ததில்லை என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கூற முடியும் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், அலிஸ்டர் குக், ஆண்ட்ரூ பிளிண்ட்டாப், கிறிஸ் கெய்ல், ஷாகிப் அல் ஹசன், ராகுல் திராவிட், ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே), ராஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி என்று கூற முடியும். அதே போல் கேப்டன்சியினால் பேட்டிங் பார்ம் காலியானவர்களும் உள்ளனர்.
இதே ஐபிஎல் தொடரிலேயே தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் கேப்டன்சி சுமையினால் பின்னடைவு கண்டதைப் பார்த்திருக்கிறோம்.
ஒருகட்டத்தில் கேப்டன்சி நெருக்கடியினால் தங்களது பேட்டிங் பார்மையும் இழந்து போதும்டா சாமி கேப்டன்ஷிப், நான் பேட்ஸ்மெனாகவே தொடர்கிறேன் என்று முடிவெடுத்தவர்கள் பலர்.
இந்நிலையில், ரிஷப் பந்த்துக்கு இவ்வளவு சிறிய வயதில் பெரிய சுமையை ஏற்றுவது அவருக்கு அளித்த வரமா அல்லது சாபமா என்பது ஐபிஎல் 2021 தொடங்கியவுடன் புரிந்து விடும்.
அப்படி அவரது பேட்டிங் பார்ம் சரியாக அமையாமல் அதனால் இந்திய கிரிக்கெட் ரிஷப் பந்த் போன்ற பொக்கிஷத்தை இழக்க நேரிட்டால் அதற்கு முழு பொறுப்பு ரிக்கி பாண்டிங்கும், டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகமுமே காரணம் என சிலர் புலம்புகின்றனர்.
ஆனால், அப்படியெல்லாம் எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
மற்ற செய்திகள்