'பாகுபலிக்கு ஒரு கட்டப்பா!.. சிஎஸ்கேவுக்கு நான் தான் பா'!.. சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் முதுகெலும்பாக மாறும் வீரர்!.. அப்படி என்ன செய்தார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 2021 தொடரின் தனது 3வது போட்டியில் சிஎஸ்கே தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை ராஜஸ்தான் அணி தேர்வு செய்த நிலையில், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில், தனது இன்னிங்சை சிஎஸ்கே 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களுடன் முடித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலும் சிஎஸ்கே இதே இலக்கையே எதிரணிக்கு நிர்ணயித்திருந்தது. அந்த போட்டியில் தோல்வியும் அடைந்தது.
இன்றைய போட்டியில் எந்த வீரரும் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். இந்த பிட்ச்சில் 200 ரன்களை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது கடந்த போட்டிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் எந்த சிஎஸ்கே வீரரும் அரைசதத்தை கடக்கவில்லை.
எனினும், சிஎஸ்கேவிற்காக விளையாடிவரும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி 20 பந்துகளில் 26 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடந்த போட்டிகளிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்களையும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 46 ரன்களையும் அவர் அடித்திருந்தார். கடந்த போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கேவின் சிறப்பான வீரராக அவர் மாறி வருகிறார்.
இந்த சீசனில் ஸ்பின் அட்டாக் மற்றும் மிடில் ஆர்டரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில், அவர் அணியின் 3வது வீரராக களமிறக்கப்பட்டு வருகிறார். அவரை அந்த இடத்தில் இறக்கினால் மற்றவர்களையும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று தோனி கடந்த போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த சீசனில் ஆர்சிபிக்காக விளையாடிய மொயீன் அலி, 3 போட்டிகளில் விளையாடி 12 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். இதையடுத்து தற்போது சிஎஸ்கேவிற்காக விளையாடிவரும் அவர், உற்சாகத்துடன் விளையாடி வருகிறார். இதற்கு தோனிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்