'இவர் கிட்ட என்ன இல்ல?.. எல்லா தகுதியும் இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக இவரு தான் வரணும்'!.. கொளுத்திப் போட்ட மைக்கேல் வாகன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவகாரம் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக தோனி நேற்று முன்தினம் 200வது போட்டியில் களம் கண்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான அந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியின் கேப்டனாக கடந்த 2008ம் ஆண்டு முதல் தோனி செயல்பட்டு வருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர், 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் சிரமப்பட்டு வருகிறார். இதனால் அவர் இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால், சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதற்கு மறுப்பு தெரிவித்து, தோனி தொடர்ந்து விளையாடுவார் என விளக்கமளித்தார்.
இந்நிலையில், தோனியின் ஓய்வுக்கு பிறகு ஜடேஜாவை மையப்படுத்தி அணியை உருவாக்க வேண்டும் என வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், தோனி இன்னும் 2 - 3 ஆண்டுகள் விளையாடுவார் என நீங்கள் சொல்லலாம், ஆனால் உண்மையை பார்த்தால் அப்படி இல்லை.
எனவே, புதிய தலைமையின் கீழ் அணியை உருவாக்க வேண்டும். அதன்படி ஜடேஜாவின் தலைமையில் அணியை அமைத்தால் சிறப்பாக இருக்கும். அவர் பேட்டிங், பவுலிங், ஆட்டத்தின் மனநிலை மிக நன்றாக உள்ளது.
ஜடேஜாவிடம் நீங்கள் 4 - 5வது வீரராக இறங்க சொல்லலாம், அது முடியாத பட்சத்தில் முன்கூட்டியே இறங்க சொல்லலாம். அவரிடம் தொடக்கத்திலேயே பவுலிங் வீசவும் சொல்லலாம். முக்கிய இடங்களில் ஃபீல்டிங்கிற்கு பயன்படுத்தலாம். அவர் அனைத்திற்கு தயாராக இருப்பார். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன்.
சென்னை அணி சாம் கரன் தலைமையில் அணியை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் மிகவும் இளம் வீரர். அவர் பெரியளவிலான பிரஷரை கையாள்வதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் ஒரு தலைமைக்கு கீழ் விளையாடும் போது தான் சிறப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்