தோனி-ரிஷப் பந்த் கம்பேரிசன்.. “இவங்க ரெண்டு பேர் கிட்டையும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சூப்பர் பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்தும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஒவ்வொரு அணிக்கும் புதிய பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் சிஎஸ்கே அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெல்லி அணிக்கு துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரிடம் தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடுவது குறித்து சமீபத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஷேன் வாட்சன், ‘பொதுவாக ஒப்பிடக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் வித்தியாசமான திறமைகள் இருக்கிறது. இந்த கிரிக்கெட் உலகம் தோனி மற்றும் ரிஷப் பந்தை ஒப்பிட முயல்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே வித்தியாசமான கிரிக்கெட் வீரர்கள். அவர்களிடம் உயர்ந்த திறமைகள் உள்ளது. இதில் இருவரிடமும் பொதுவாக இருக்கும் பண்பு என்னவென்றால், இரண்டு பேரும் அணியை பொறுமையாகவும், நிதானமாகவும் வழிநடத்தும் திறமை உள்ளவர்கள்.
இந்த இளம் வயதிலேயே ரிஷப் பந்த் படைத்துள்ள சாதனைகள் அபாரமானது. வரும் காலங்களில் தனது அனுபவங்களின் மூலம் முன்னேற்றம் அடைவார். தோனி மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் அவர்களுக்கு உரித்தான பாணியில் சிறப்பாக விளையாடுகின்றனர்’ என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்