IPL 2022 : டிஆர்எஸ், சூப்பர் ஓவரில் வரப்போகும் புது ரூல்ஸ்.. "ஃபைனல்ஸ்'ல தான் பெரிய ஆப்பு ஒண்ணு இருக்கு.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் சீசன், மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த முறை, ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக, மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. கடந்த முறை, இந்தியாவில் வைத்து ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்த போது, சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவே, இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது.
இதனால், அருகேயுள்ள மைதானங்களைத் தேர்வு செய்து ஆடும் படசத்தில், வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என்பதால் பிசிசிஐ இப்படி ஒரு திட்டம் போட்டு, அட்டவணையை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து ஐபிஎல் அணிகளும் போட்டிகளுக்கு வேண்டி தீவிரமாக தயாராகவும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் தொடரில் சில முக்கிய விதி மாற்றங்கள் குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
கொரோனவால் தடை?
கொரோனா தொற்றின் காரணமாக, போட்டிகள் தடைபடாமல் இருக்க வேண்டி, பிசிசிஐ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஒரு அணியில் போட்டிக்கு வேண்டி ஆடுவதற்கு தகுதியாக 12 வீரர்கள் (7 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு substitute ஃபீல்டர் உட்பட) இருக்க வேண்டும். ஒரு வேளை ஏதாவது அணியில் 12 வீரர்களும் இல்லாமல் போனால், அந்த போட்டி மாற்றி வைக்கப்படும். அப்போதும் நடக்காமல் போனால், எதிரணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
புதிய டிஆர்எஸ் விதி
இதுவரை, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு, ஒரே ஒரு டிஆர்எஸ் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை, ஒரு அணிக்கு இரண்டு டிஆர்எஸ் ரிவியூக்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எப்படி?
கேட்ச் மூலம் ஒரு வீரர் ஆட்டமிழக்கும் போது, ரன் ஓடி வீரர்கள் க்ராஸ் செய்தாலும், புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் தான் பேட்டிங் செய்ய வேண்டும். ஒரு வேளை, ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் சென்றால் மட்டுமே நான் ஸ்ட்ரைக்கர் அடுத்த ஓவரில் பேட்டிங் செய்வார். இந்த விதி, சமீபத்தில் சர்வதேச போட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை, ஐபிஎல் போட்டிகளிலும் செயல்படுத்தவுள்ளனர்.
மான்கட் முறையில் அவுட்
மேலும், மான்கட் முறையில் அவுட்டானால், அது ரன் அவுட் என மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை, இந்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்தவுள்ளனர்.
சூப்பர் ஓவர் ரூல்ஸ்
ஒரு வேளை, ஐபிஎல் பிளே ஆஃப் அல்லது இறுதி போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் வீச முடியாமல் போனால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ, அந்த அணி தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கோப்பையை வெல்லும் அணியைக் கூட ஒரு வேளை இந்த விதி மாற்றம் தீர்மானிக்கும் என்பதால், அனைத்து அணிகளும் லீக் போட்டிகளில், வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதன்மையுடன் விளங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படி மொத்தம் ஐந்து புதிய விதிமுறை மாற்றங்கள், ஐபிஎல் தொடரில் வரவுள்ளதால், பிசிசிஐயின் முடிவு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்