அடுத்த வருஷம் ஐபிஎல் முதல் போட்டியே.. ‘சென்னை’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ள இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அகமதாபாத் மற்றும் லக்னோவை மையமாக கொண்டு இரு அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இதனிடையே ஏற்கனவே தங்கள் அணியில் விளையாடிய வீரர்கள் 4 பேரை ஒவ்வோரு அணியும் தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்தது. இதனை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முதல் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தடவை 10 அணிகள் விளையாட உள்ளதால், மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை 60 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 7 போட்டிகள் ஹோம் மைதானத்திலும், 7 போட்டிகள் மற்ற மைதானங்களிலும் நடைபெறும் என தெரிகிறது. ஆனாலும் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஐபிஎல் மெகா ஏலம் முடிவடைந்ததும், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்