திடீரென ‘கேப்டன்’ பொறுப்பை அவர்கிட்ட ஏன் கொடுத்தீங்க?.. ‘முதல்முறையாக’ மனம் திறந்த தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇயன் மோர்கனிடம் கேப்டன்ஷியை ஒப்படைத்ததற்கான காரணத்தை கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கியுள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அப்போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதேபோல் கேப்டன் இயன் மோர்கனும் 29 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இந்த நிலையில் கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில் கேப்டன்ஷியை இயன் மோர்கனிடம் கொடுத்ததற்கான காரணத்தை தினேஷ் கார்த்திக் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘கடந்த வருடம் இயன் மோர்கனுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். தொடரின் முதல் 7 போட்டிகள் முடிவடைந்து, அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல 7 போட்டிகளே மீதம் இருந்தன. அப்போது அணியை நான் சரியாக வழி நடத்தவில்லை என்பதை உணர்ந்தேன். மறுபடியும் அதே தவறை செய்யக் கூடாது என நினைத்தேன்.
என்னைப் பொறுத்தவரை இது நியாயம் இல்லாத செயல்தான். இரண்டரை வருடங்களாக அணியை வழி நடத்தி இருக்கிறேன். வீரர்கள் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் இயன் மோர்கனும் சிறப்பாக செயல்படக் கூடியவர்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து அணியை வழி நடத்தவே இந்த முடிவை எடுத்தேன்’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்கள் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். அதில் 2018-ம் ப்ஆண்டு மட்டுமே இவர் தலைமையிலான அணி ப்ளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது. கேப்டன்ஷியில் தன்னை பெரிதாக நிரூபிக்க முடியாததால், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் இயன் மோர்கனிடம் கேப்டன்ஷியை தினேஷ் கார்த்திக் ஒப்படைத்தார். தற்போது கொல்கத்தா அணியின் துணைக்கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயன் மோர்கன் கேப்டன்ஷியும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை நழுவவிட்டது. அப்போது கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான், இந்த தோல்வி தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், முதல் பாதியில் நன்றாக செயல்பட்ட கொல்கத்தா அணி, கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது. சேப்பாக்கம் போன்ற கடினமான மைதானத்தில் 204 ரன்கள் அடித்து பெங்களூரு அணி மிரட்டியது. ஆனால் இந்த இமாலய இலக்கை கொல்கத்தா அணியால் சேஸ் செய்ய முடிவில்லை. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ‘நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான கேப்டன்ஷி இதுதான்’ என கொல்கத்தா அணியை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்