'யாரும் வருத்தப்பட தேவையில்ல... இந்தியாவிலேயே ஜாம் ஜாம்னு ஐபிஎல் நடத்தலாம்'!.. பிசிசிஐ வட்டாரத்தில் புது ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படலாம் என பிசிசிஐ முன்னாள் தலைவர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

'யாரும் வருத்தப்பட தேவையில்ல... இந்தியாவிலேயே ஜாம் ஜாம்னு ஐபிஎல் நடத்தலாம்'!.. பிசிசிஐ வட்டாரத்தில் புது ப்ளான்!

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடையே உலாவி வருகிறது. இந்தியாவில் தற்போதைக்கு கொரோனாவின் வீரியம் குறையாது என்பதால் இங்கிலாந்து, அமீரகம் போன்ற நாடுகளில் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  

ஒருபுறம் கொரோனாவுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டதே இந்த நிலைமைக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்துவந்தாலும், மறுபுறம் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்து வருகிறது பிசிசிஐ. ஏனெனில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் சுமார் ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும். 

இந்நிலையில், இந்தியாவில்தான் தொடர் நடத்த வாய்ப்பு இருப்பதாக நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் ஐபிஎல்-ஐ நடத்தியது சரியான முடிவுதான். இது நம் நாட்டின் கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு முறையும் அமீரகத்திற்கு செல்லக்கூடாது. 

அமீரகத்திற்கு கொண்டு செல்வதை விட இந்தியாவில் பாதுகாப்பாக நடத்திவிடலாம் என பிசிசிஐ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. ஐபிஎல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா அச்சுறுத்தல் குறைந்தே காணப்பட்டது. அதனால் தான் இந்தியாவில் நடத்த முடிவு செய்தனர். அதற்கு ஏற்றார் போல் சில நாட்கள் நல்லபடியாக போட்டிகள் நடந்தன. இது ஒரு நல்ல முயற்சி. இதை நாம் பாராட்ட வேண்டும். 

சர்வதேச தொடர்களுக்கு இடையே கண்டிப்பாக கால இடைவெளிகள் உள்ளன. அதில் இருந்து ஐபிஎல்-க்காக 30 நாட்களை உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு தொடர்களை இந்த ஆண்டின் இறுதிக்கு தள்ளிவைத்தால் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான நாட்கள் கிடைக்கும். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நிலைமை சரியாகிவிடும். அதன் பின்னர் ஐபிஎல் தொடர் குறித்த முடிவை பிசிசிஐ எடுக்கலாம் என ஷா தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்